வியாழன், 24 மே, 2012

காசம் தீர்க்கும் கற்பூரவள்ளி

புகை பிடிப்பவரா....?

புகை நமக்குப் பகை என்ற வாசகம் போட்டு இருந்தும் புகைப்பவர்கள் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. அரசு பொது இடங்களில் புகை பிடித்தலுக்கு தடை பிறப்பித்தும் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. புகையினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்பட்டும் இந்நிலை மாறவில்லை. புகைப்பவர்கள் அதிகம் நுரையீரல் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதே நாளடைவில் புற்று நோயாக மாறுகின்றது.

இவர்கள் கற்பூரவள்ளி இலையினை சாறெடுத்து அதை நன்கு சுண்டக் காய்ச்சி பாதியான அளவு எடுத்து வடிகட்டி அருந்தி வந்தால் புகையினால் உண்டான பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

வியர்வை பெருக்கி

சிலருக்கு வியர்க்காமல் உடம்பு முழுவதும் படிவம் போல் காணப்படும். நமது உடலில் தோலில் பல கோடி துளைகள் உள்ளன. இவற்றின் மூலம்தான் வியர்வை சுரப்பிகள் வியர்வையை வெளியேற்றுகின்றன. இந்த வியர்வையின் மூலம் உடலில் உள்ள அசுத்த நீர் வெளியேறுகிறது.

இந்த வியர்வை நன்கு வெளியேறவும், வியர்வை சுரப்பிகள் நன்கு செயல்படவும் கற்பூரவள்ளியின் இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வியர்வை பெருகும்.

காசநோய்

காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். கற்பூரவள்ளி செடியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் ஈறாடுகால் (12 அடி விட்டம்) வரை எந்த விதமான பூச்சிகளையும் அண்ட விடாது.

சித்தர்கள் இதனை கற்பக விருட்சத்துடன் ஒப்பிடுவார்கள். இதனால் கூட இதற்கு கற்பூரவள்ளி என்று பெயர் வந்திருக்கலாம்.

வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம். நாட்டைப் பாதுகாக்கும் போர்ப்படை வீரர்களைப் போல் மனிதனை இந்த கற்பூரவள்ளி பாதுகாக்கிறது.

நாமும் நம் வீட்டில் கற்பூரவள்ளியை வளர்த்து அதன் பயனைப் பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக